பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
காரைக்கால் அம்மையார் பாசுரங்கள்
2.04 காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புதத் திருவந்தாதி
காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புதத் திருவந்தாதி
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு.
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற் பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம் செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மைஆட் கொண்ட இறை.
இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அது மாற்றுவான்.
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்பன் யான்.
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக் கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக் காளாயி னேன்.
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் அஃதன்றே யாமாறு - தூய புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் அனற்கங்கை ஏற்றான் அருள்.
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு.
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் மனிக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே யெனக்கரிய தொன்று.
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது.
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும் அதுவே இனியறிந்தோ மானால் - அதுவே பனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர் தனிக்கணங்கு வைத்தார் தகவு.
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமே லேபாவந் தான்.
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான் தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானை நினைந்து.
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து மின்செய்வார் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற் கென்செய்வான் கொல்லோ இனி.
இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம் இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண்.
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக் காதியாய் நின்ற அரன்.
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத் தானவனைப் பாதத் தணிவிரலாற் செற்றானை யானவனை எம்மானை இன்று.
இன்று நமக்கௌிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர் மூவா மதியானை மூவே ழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு.
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்.
அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து.
வந்திதனைக் கொள்வதே யொக்கும்இவ் வாளரவின் சிந்தை யதுதெரிந்து காண்மினோ- வந்தோர் இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள் பிரானீர்உம் சென்னிப் பிறை.
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையா உள்ள மிது.
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று.
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு.
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல் பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே பொன்னாரம் மற்றொன்று பூண்.
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம் பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவ தாக இவர்.
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை இகழ்வதே கண்டீர் -இவர் தமது பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர்.
பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார் வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு.
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின் முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்த தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே ஆம்.
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகணையா தாரை அடும்.
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந் திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல மணிமிடற்றின் உள்ள மறு.
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான் தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி வளருமோ பிள்ளை மதி.
மதியா அடலவுணர் மாமதில்மூண் றட்ட மதியார் வளர்சடையி னானை - மதியாலே என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில் என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவம் தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர் தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு கூரேறு காரேனக் கொம்பு.
கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன் அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன் அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி மணிவரையே போலும் மறித்து.
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர் கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட் டுள்ளாதார் கூட்டம் ஒருவு.
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால் நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ இளங்குழவித் திங்கள் இது.
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல் எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே தானே அறிவான் தனக்கு.
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானோர் பிரான்.
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க் கௌிது.
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற் றெந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழுந் திறம்.
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால் பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் திருவடிக்கட் சேருந் திரு.
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும் பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள் இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா ததுமதியொன் றில்லா அரா.
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு கதிர்விரியஓடி - விராவுதலால் பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே தன்னோடே யொப்பான் சடை.
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல் வலப்பால்அக் கோல மதிவைத்தான்தன் பங்கின் குலப்பாவை நீலக் குழல்.
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத் தெழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத் தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர்.
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - பேரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய் ஓருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவ மேகத்தாற்செய்தனைய மேனியான் நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு.
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு கண்டங் கறுத்ததுவு மன்றியே - உண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியி னுள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு.
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண் புலாற்றலையின் உள்ளுண் புறம்பேசக் கேட்டோ நிலாத்தலையிற் சூடுவாய் நீ.
நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடஅரவம் மேலாட மிக்கு.
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும் ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல் ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில் பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண் கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும் அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ தெவ்வுருவோ நின்னுருவ மேல்.
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல் போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ தம்மான் திருமேனி அன்று.
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது.
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால் வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு.
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேல் திங்கள் நிலா.
நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று.
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு.
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன் உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு.
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற் றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் முதிரா மதியான் முடி.
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல அடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற் குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம் இனிஅவலம் உண்டோ எமக்கு.
எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிரா தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில் ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.
இடப்பால வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப் பாகங் கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே முக்கண்ணாய் கண்.
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும் கண்ணாளா ஈதென் கருத்து.
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலஞ் சிக்கென நான்சொன்னேன் - பருத்தரங்க வெள்ளநீ ரேற்றேன் அடிக்கமலம் நீவிரும்பி உள்ளமே எப்போதும் ஓது.
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட ஏது நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள் எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா கண்ணார் கபாலக் கமலம்.
கலங்கு புனல்கங்கை ஊடால லாலும் இலங்கு மதிஇயங்க லாலும் - நலங்கொள் பரிசுடையான் நீண்முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் காணில் விசும்பு.
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும் எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி.
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம் மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றா தரங்கு.
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல் என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான் பன்னாள் இரந்தாற் பணிந்து.
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு.
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள் அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக் காலனையும் வென்றுதைத்த கால்.
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான் சரணார விந்தங்கள் சார்ந்து.
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் - தேர்ந்துணரில் தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே என்றுரைக்கும் மின்.
மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது.
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக் கண்டாலும் முக்கணான் கண்.
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும் எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன் எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ பெரியானைக் காணப் பெறின்.
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ துறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய நற்கணத்தி லொன்றாய நாம்.
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர் அறிவினையே பற்றினால் எற்றே தடுமே எறிவினையே என்னும் இருள்.
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி.
ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித் தௌிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம் உண்டவா யஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள் கொண்டவா றென்இதனைக் கூறு.
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித் திட் டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை.
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே எம்மைப் புறம்உரைப்ப தென்.
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந் தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூச்சடையோன் வானோர்க் கருளாக வைத்த அவன்.
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும் அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன் கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள் மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லாய் அவள்.
அவளோர் குலமங்கை பாகத் தகலாள் இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ றென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள் அன்பணியார் சொல்லுமின்இங் கார்.
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும் போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து.
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல் உறைப்போடும் உன்கைக் கொண்டாயோ - நிறைத்திட் டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக் களைந்தெழுந்த செந்தீ யழல்.
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாயிதனைக் செப்பு.
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட் டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன் றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய நாகத்தா யாடுன் நடம்.
நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் திசைவேம் இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கற் பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே றுருமேறோ ஒன்றா உரை.
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார் ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார் பேராத காதல் பிறந்து.