Skip to content
Prabandha Malai

சேரமான் பெருமாள் நாயனார் பாசுரங்கள்

4.03 சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த திருக்கயிலாய ஞானவுலா

சேரமான் பெருமாள் நாயனார்

சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த திருக்கயிலாய ஞானவுலா

300

திருமாலும் நான்முகனுந் தேர்ந்துணரா தன்றங் கருமால் உறஅழலாய் நின்ற - பெருமான் பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான் ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல் ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான் யாதும் அணுகா தணுகியான் - ஆதி அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே ௭ பரனாய தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும் தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குங் காண்பரிய எம்பெருமான் - ஆனாத சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப - ஆராய்ந்து செங்கண் அமரர் புறங்கடைக்கட் சென் றீண்டி எங்கட்குக் காட்சியருள் என்றிரப்ப - அங்கொருநாள் பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கை நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள் ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன் மொய்த்த குஞ்சியின்மேற் சித்திரிப்ப - ஊனமில்சீர் நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தா வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள் குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு நலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த கற்பகம் ஈன்ற கமழ்பட் டினைஉடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும் சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங் கணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய ஆரம் அவைபூண் டணிதிக ழுஞ்சன்ன வீரந் திருமார்பில் வில்லிலக - ஏருடைய எண்டோட்கும் கேயூரம் பெய்துதர பந்தனமும் கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக் - கொண்டு கடிசூத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்து வடிவுடைய கோலம் புனைந்தாங் - கடிநிலை மேல் நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர் எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும் அண்ணல்மேல் ஆசிகள் தாமுணர்த்த - ஒண்ணிறத்த பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப மன்னும் அகத்தியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும் அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண் நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏந்த வருணன் மணிக்கலசந் தாங்கத் -தெருவெலாம் வாயு நனிவிளக்க மாமழை நீர்தௌிப்பத் தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர் ஈசானன் வந் தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள் வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன் திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த கங்கா நதியமுனை உள்ளுருத்த தீர்த்தங்கள் பொங்கு கவரி புரையிரட்டத் - தங்கிய பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய் மேகத் துருமு முரசறையப் - போகஞ்சேர் தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும் கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான் விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர் வெண்ணோர் மழவிடையை மேற்கொண்டாங் - கெண்ணார் கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் - செருக்குடைய சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலுந் திண்டோட் கருடன்மேல் ௭ மன்னிய மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேலிடப்பால் மென்கருப்பு வில்லிடப்பால் - ஏல்வுடைய சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான் கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான் காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர் வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச் சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டை ஒண்கண் - தாழ்கூந்தல் மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாந் தடாரி படகம் - இடவிய மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும் மாறாத முத்திரையும் மந்திரமும் - ஈறார்ந்த காலங்கள் மூன்றுங் கணமுங் குணங்களும் வால கிலியரும் வந்தீண்டி - மேலை இமையோர் பெருமானே போற்றி எழில்சேர் உமையாள் மணவாளா போற்றி - எமையாளும் தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி ஈசனே எந்தாய் இறைபோற்றி - தூயசீர்ச் சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி பொங்கரவா பொன்னங் கழல்போற்றி - அங்கொருநாள் ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி - தூய மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றிதாள் போற்றி - நிலைபோற்றி போற்றியெனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும் எங்கும் நலம்பெருக - ஏற்றுக் கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழக் -கடிகமழும் பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே குழாங்கள் வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம் கோமான் படைமுழக்கம் கேட்டலுமே -தூமாண்பில் வானநீர் தாங்கி மறையோம்பி வான்பிறையோ டூனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா வெள்ளை அணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய மாட நடுவில் மலரார் அமளியே கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில் சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும் கூழைபின் தாழ வளையார்ப்பக் கைபோந்து கேழ்கிளரும் அல்குலாந் தேருந்திச் - சூழொளிய கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழற் பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகப்புனைந்து - பொற்புடைய பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக மாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர் சூளிகையுஞ் சூட்டுஞ் சுளிகையுஞ் சுட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின் மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு மால்ஏறி நின்று மயங்குவார் - நூல்ஏறு தாமமே தந்து சடாதாரி நல்கானேல் யாமமேல் எம்மை அடுமென்பார் - காமவேள் ஆமென்பார் அன்றென்பார் ஐயறுவார் கையெறிவார் தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் - பூமன்னும் பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு துன்னரி மாலையாச் சூடுவார் - முன்னம் ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதாதோடித் தெருவம் புகுவார் திகைப்பார் - அருகிருந்த கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளிஎன்று பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் - அண்ணல்மேற் கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார் திண்ண நிறைத்தாழ் திறந்திட்டார் - ஒண்ணிறத்த பேதை பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச் சிறுசோ றடுதொழிலாள் - தீதில் இடையாலும் ஏக்கழுத்த மாட்டாள் நலஞ்சேர் உடையாலும் உள்ளுருக்க கில்லாள் - நடையாலும் கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள் எவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் - செவ்வனேர் நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்தன் செவ்வாயின் வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும் பாடவந் தோன்ற முடியாள் இளவேய்த்தோள் ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் - நாடொறும் ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற மனத்தினளாஞ் சேயிழையாள் - நன்றாகத் தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி நீல அறுவை விரித்துடுத்துக் - கோலஞ்சேர் பந்தரிற் பாவை கொண்டாடும்இப் பாவைக்குத் தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர் ஈசன் எரியாடி என்ன அவனையோர் காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத் - தாய்சொன்ன இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமன்நூல் நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய பெதும்பை பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள் காரொளிசேர் மஞ்ஞைக் கவின்இயலாள் - சீரொளிய தாமரை ஒன்றின் இரண்டு குழையிரண்டு காமருவி கெண்டையோர் செந்தொண்டை - தூமருவு முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம் வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த கங்கணஞ் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின் கிங்கணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழல் அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியிற் சந்தனந் தோய்ந்த தடந்தோளாள் - வந்து திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள் கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் - மடல்பட்ட மாலை வளாய குழலாள் மணம்நாறு சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் - சாலவும் வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக் கஞ்சனத்தை இட்டங் கழகாக்கி - எஞ்சா மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணியார் வளைதோள்மேல் மின்ன - மணியார்த்த தூவெண் மணற்கொண்டு தோழியருந் தானுமாய்க் காமன் உருவம் வரஎழுதிக் - காமன் கருப்புச் சிலையும் மலரம்புந் தேரும் ஒருப்பட் டுடன் எழுதும் போழ்தில் - விருப்பூரும் தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக் கைவண்டுங் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட மங்கை மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி கொங்கை கமலம் முகங்கமலம் - பொங்கெழிலார் இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேயெழிலார் பட்டுடைய அல்குலுந் தேர்த்தட்டு - மட்டுவிரி கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த மணி முறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர் வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள் காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து - மாதராள் பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் - நற்கோட்டு வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர் தாழுஞ் சடையான் சடாமகுடந் தோன்றுதலும் வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான் தார்நோக்குந் தன்தாரும் நோக்கும் அவனுடைய ஏர்நோக்குந் தன்ன தெழில் நோக்கும் - பேரருளான் தோள்நோக்குந் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின் நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண் நோக்கா துள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய மடந்தை தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர் ஈசன் சிலையும் எழில்வான் பவளமும் சேய்வலங்கை வேலுந் திரள்முத்தும் - பாசிலைய வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும் மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப் புருவமுஞ் செவ்வாயும் கண்ணும் எயிறும் உருவ நுசுப்பும்மென் தோளும் - மருவினிய கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர் பங்கயப் போதனைய சேவடியாள் - ஒண்கேழல் வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர் ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் - ஊழித் திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய முத்தாரங் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள் மொய்த்தார வாரம் மிகப் பெருகி -வித்தகத்தால் கள்ளுங் கடாமுங் கலவையுங் கைபோந்திட் டுள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய காளிங்கஞ் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த தாளிம்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும் தண்ணறுஞ் சந்தனம் கொண் டப்பிச் சதிர்சாந்தை வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் - கொண்ணுதலாள் தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப் பின்னுமோர் காமரம் யாழ் அமைத்து - மன்னும் விடவண்ணக் கண்டத்து வேதியன் மேல்இட்ட மடல்வண்ணம் பாடும் பொழுதீண் - டடல்வல்ல வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும் மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால அணியேறு தோளானைக் கண்டாங் - கணிஆர்ந்த கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் கோட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள் எல்லாருங் கண்டார் எனக் கடவுள் இங்காயம் நல்லாய் படுமேற் படுமென்று -மெல்லவே செல்ல லுறுஞ்சரணம் கம்பிக்குந் தன்னுறுநோய் சொல்லலுறுஞ் சொல்லி உடைசெறிக்கும் - நல்லாகம் காண லுறுங்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன் நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது - பூணாகம் புல்லலுறும் அண்ணல்கை வாரான்என் றிவ்வகையே அல்லலுறும் அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள் தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப் பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி அரிவை செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் -ஒண்கேழல் திங்களுந் தாரகையும் வில்லுஞ் செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையாற் - பொங்கொளிசேர் மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்னாவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர் இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார் நடைபெடை அன்னத்தை வென்றாள் - அடியிணைமேற் பாடகங் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர் சூடகம் முன்கை தொடர்வித்தாள் - கேடில்சீர்ப் பொன்னரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு மன்னுங் கழுத்தை மகிழ்வித்தாள் - பொன்னனாள் இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமே பாடல் தொடங்கும் பொழுதிற் பரஞ்சோதி கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையுங் கைவிட்டுப் -பொன்னனையீர் இன்றன்றே காண்ப தெழில் நலம் கொள்ளேனேல் நன்றன்றே பெண்மை நமக்கென்று - சென்றவன்தன் ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழற் கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும் சாந்தந் திமிரும் முலைஆர்க்கும் - பூந்துகிலைச் சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர்துயருற் றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் ௭ சூழொளிய அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள் நங்கை இவளும் நலந்தோற்றாள் - அங்கொருத்தி தெரிவை ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள் - ஓரா மருளோசை இன்மழலை வாய்ச்சொலால் என்றும் இருள்தீர் புலரியே ஒப்பாள் - அருளாலே வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்து அந்தளிர்போல் சேவடியும் அங்கையும் செம்மையால் அந்திவான் காட்டும் அழகினாள் - அந்தமில் சீரார் முகம்மதியம் ஆதலாற் சேயிழையாள் ஏரார் இரவின் எழில்கொண்டாள் - சீராரும் கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்ணிளங் காரின் சவிகொண்டாள் -வண்ணஞ்சேர் மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால் வாய்ந்த இளவேனில் வண்மையாள் - மாந்தர் அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று பறையறைவ போலுஞ் சிலம்பு - முறைமையால் சீரார் திருந்தடிமேற் சேர்த்தினாள் தேரல்குல் ஓரா தகலல் உறாதென்று - சீராலே அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள் மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால் காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர் நற்கழுத்தை நல்லாரத் தால்மறைத்துக் காதுக்கு விற்பகருங் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும் காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள் போலத்தன் தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும் ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும் கோகிலமும் போலும் குணத்தினாள் - ஆகிப் பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி அலர்சுமந்து கூழைய ஆகிக் - கலைகரந்து உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்து கள்ளாவி நாறுங் கருங்குழலாள் - தெள்ளொளிய செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார் பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகிரும் தோளான் நிலைபேறு தோற்றங்கே டாய்நின்ற தாளான் சடாமகுடம் தோன்றுதலும் - கேளாய நாணார் நடக்க நலத்தார்க் கிடைஇல்லை ஏணார் ஒழிக எழில்ஒழிக - பேணும் குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின் நலத்தீர் நினைமினீர் என்று - சொலற்கரிய தேவாதி தேவன் சிவனாயில் தேன்கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது - போவானேல் கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாய பேரிளம்பெண் பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் - மண்ணின்மேல் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல் விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம் அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த வஞ்சிக்கொடி நுடங்கும் நுண்ணிடையாள் - எஞ்சாத பொற்செப் பிரண்டு முகடு மணியழுத்தி வைத்தன போல வளர்ந்தேந்தி - ஒத்துச் சுணங்கும் திதலையுஞ் சூழ்போந்து கண்டார்க் கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த கொங்கையாள் கோலங்கட் கெல்லாமோர் கோலமாம் நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் - அங்கையாற் காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள் சாந்தம் இலங்கும் அகலத்தாள் - வாய்ந்துடனே ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து துடித்த செழும்பவளம் -காய்த்திலங்கி முத்தமுந் தேனும் பொதிந்து முனிவரையும் சித்தந் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள் உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய தண்ணங் கயலும் சலஞ்சலமுந் தோன்றுதலால் வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப யோசனை நாறு குழலாள் ஒளிநுதல்மேல் வாசிகை கொண்டு வடிவமைத்தாள் - மாசீல்சீர்ப் பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் - மாதார்ந்த பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர் வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழற் கண்ணவனை அல்லாது காணா செவிஅவன தெண்ணருஞ்சீர் அல்ல திசைகொள்ளா - அண்ணல் கழலடி அல்லது கைதொழா அஃதான்று அழலங்கைக் கொண்டான்மாட் டன்பென் - றெழிலுடைய வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால் அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில் ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர் வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போற் கட்டுரைத்துக் கைசோர்ந் தகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு. காப்பு

301

பெண்ணீர்மை காமின் பெருந்தோள் இணைகாமின் உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக் காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன் ஊரேறு போந்த துலா.