Skip to content
Prabandha Malai

நக்கீரதேவ நாயனார் பாசுரங்கள்

5.07 நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்த கார் எட்டு

நக்கீரதேவ நாயனார்

நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்த கார் எட்டு

492

அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல் விரவி எழுந்தெங்கும் மின்னி - அரவினங்கள் அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே கைச்சங்கம் போல்முழங்கும் கார்.

493

மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன் கையார் சிலை விலகிக் காட்டிற்றே - ஐவாய் அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக் கழலரவம் காண்புற்ற கார்.

494

ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும் கோலக் குழற்சடையும் கொல்லேறும் - போல இருண்டொன்று மின்தோன்றி அம்பொனவ் வானம் கருண்டொன்று கூடுதலிற் கார்.

495

இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக் குருள்கொண்ட செஞ்சடைமேல் மின்னிச் - சுருள்கொண்டு பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே காம்பினங்கள் தோள்ஈயக் கார்.

496

கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான் றாடரவம் எல்லாம் அளையடைய - நீடரவப் பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே கற்பகலம் காண்புற்ற கார்.

497

பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும் ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும் அரவஞ் செலவஞ்சும் அஞ்சொலார் காண்பார் கரவிந்தம் என்பார்அக் கார்.

498

செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி அழுந்தி அலர்போல் உயர - எழுந்தெங்கும் ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே காவிசேர் கண்ணாய்அக் கார்.

499

காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப் பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர் அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர் கண்டம்போல் மீதிருண்ட கார்.