நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம் மலர்த் தடம் பணை வயல் புகு பொன்னி நன்னாட்டுக் குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமித் தலத்தின் மேம் படு நலத்தது பெருந் திருத் தலையூர்
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்
4.03 உருத்திர பசுபதி நாயனார் புராணம்
சேக்கிழார்
வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ தேன் அளிப்பன நறுமலர் செறி செழுஞ் சோலை ஆன் அளிப்பன அம் சுகந்து ஆடுவார்க்கு அவ்வூர் தான் அளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்
அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத் துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி பங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார்
ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும் தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார்
கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு பிரச மென் சுரும்பு அறைந்திடக் கரு வரால் பிறழும் நிரை நெடுங் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய விரை நெகிழ்ந்த செங் கமலம் என் பொய்கையுள் மேவி
தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறிய உள்ளுறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத் தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார் கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்
அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே திருமலர்ப் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்
காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம் தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால் ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப் பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம் கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற
அயில் கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால் பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம் செயலுடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்