Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

8.07 சத்தி நாயனார் புராணம்

சேக்கிழார்

4039

களமர் கட்ட கமலம் பொழிந்த தேன் குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்

4040

வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார் விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும் அரும் சிலம்பு அணி சேவடிக்காள் செய்வார்

4041

அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை வைத்த நாவை வலித்து அரி சத்தியால் சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார்

4042

தீங்கு சொற்ற திருவிலர் நாவினை வாங்க வாங்கும் தண்டு ஆயத்தினால் வலித்து தாங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர்

4043

அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி மன்னு பேருலகத்தில் வலி உடன் பண்னெடும் பெருநாள் பரிவால் செய்து சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர்

4044

ஐயம் இன்றி அரிய திருப்பணி மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர் வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார் செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்

4045

நாயனார் தொண்டரை நலம் கூறலார் சாய நாவரி சத்தியார் தாள் பணிந்து ஆய மா தவத்து ஐயடிகள் எனும் தூய காடவர் தம் திறம் சொல்லுவாம்