Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

9.02 காரிநாயனார் புராணம்

சேக்கிழார்

4064

மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக் குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்

4065

அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச் சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்

4066

யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பத் தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம் காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய்

4067

ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினராய் அணி கங்கை தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால் வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்

4068

வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும் காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில் சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்