Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

12.02 மங்கையர்க்கரசியார் புராணம்

சேக்கிழார்

4189

மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள் பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே

4190

பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னிப் பின்னை ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்

4191

வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள் திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும் பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம்