Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.104 திருப்புகலி

திருஞானசம்பந்தர்

1.104

திருப்புகலி பண் - வியாழக்குறிஞ்சி

1122

ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான் ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.

1123

ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.

1124

ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன் பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.

1125

வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங் கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில் அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப் புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.

1126

சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம் ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன் வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர் பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.

1127

மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம் அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும் புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.

1128

மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள் கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ் செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம் அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே.

1129

வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும் நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன் பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள் ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.

1130

தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம் மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.

1131

வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும் அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல் வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே.

1132

வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப் போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள் நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே.