திருவீழிமிழலை பண் - நட்டபாடை
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.11 திருவீழிமிழலை
திருஞானசம்பந்தர்
சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான் படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான் மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான் விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய் மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய் ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய் வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.
வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில் மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும் விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.
பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும் உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.
ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின் தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத் தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர் மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.
கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர் எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல் வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.
கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான் புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.
முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப் பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.
பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.
மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள் இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப் பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன் விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.
வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர் காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும் யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம் (*)ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே. (*) ஊழின்வலி என்றும் பாடம்.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை. உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப