Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.26 திருப்புத்தூர்

திருஞானசம்பந்தர்

1.26

திருப்புத்தூர் பண் - தக்கராகம்

272

வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத் திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க் கங்கை தங்கு முடியா ரவர்போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே.

273

வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத் தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர் ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும் ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.

274

பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத் தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர் ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந் தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.

275

நாற விண்ட நறுமா மலர்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.

276

இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத் திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர் பசை விளங்கப் படித்தா ரவர்போலும் வசை விளங்கும் வடிசேர் நுதலாரே.

277

வெண்ணி றத்த விரையோ டலருந்தித் தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர் ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும் வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.

278

நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ் செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த் தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும் மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.

279

கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத் திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர் இருக்க வல்ல இறைவ ரவர்போலும் அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.

280

மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப் பெருகி வாழும் பெருமா னவன்போலும் பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

281

கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல் தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர் ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.

282

நல்ல கேள்வி ஞான சம்பந்தன் செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும் அல்லல் தீரும் அவலம் அடையாவே.

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.