Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்

திருஞானசம்பந்தர்

1.29

திருநறையூர்ச்சித்தீச்சரம் பண் - தக்கராகம்

305

ஊரு லாவு பலிகொண் டுலகேத்த நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல் சீரு லாவு மறையோர் நறையூரிற் சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.

306

காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ வீடு மாக மறையோர் நறையூரில் நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

307

கல்வி யாளர் கனக மழல்மேனி புல்கு கங்கை புரிபுன் சடையானூர் மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற் செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.

308

நீட வல்ல நிமிர்புன் சடைதாழ ஆட வல்ல அடிக ளிடமாகும் பாடல் வண்டு பயிலும் நறையூரிற் சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

309

உம்ப ராலும் உலகின் னவராலும் தம்பெ ருமைய ளத்தற் கரியானூர் நண்பு லாவு மறையோர் நறையூரிற் செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

310

கூரு லாவு படையான் விடையேறிப் போரு லாவு மழுவான் அனலாடி பேரு லாவு பெருமான் நறையூரிற் சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.

311

*அன்றி நின்ற அவுணர் புரமெய்த வென்றி வில்லி விமலன் விரும்புமூர் மன்றில் வாச மணமார் நறையூரிற் சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே. (*) அன்றி நின்ற - பகைத்து நின்ற

312

அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால் நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர் பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற் திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

313

ஆழி யானும் அலரின் உறைவானும் ஊழி நாடி உணரார் திரிந்துமேல் சூழு நேட எரியாம் ஒருவன்சீர் நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

314

மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார் கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல் உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற் செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.

315

மெய்த்து லாவு மறையோர் நறையூரிற் சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன் பத்தும் பாடப் பறையும் பாவமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சித்தநாதேசர், தேவியார் - அழகாம்பிகையம்மை.