Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.33 திரு அன்பிலாலந்துறை

திருஞானசம்பந்தர்

1.33

திரு அன்பிலாலந்துறை பண் - தக்கராகம்

349

கணைநீடெரி மாலர வம்வரை வில்லா இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர் பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம் அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே.

350

சடையார்சது ரன்முதி ராமதி சூடி விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன் கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே.

352

ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப் பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர் நீருண்கய லும்வயல் வாளை வராலோ டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே.

353

பிறையும்மர வும்முற வைத்த முடிமேல் நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார் மறையும்பல வேதிய ரோத ஒலிசென் றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே.

354

நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல் கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார் மாடும்முழ வம்மதி ரம்மட மாதர் ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே.

355

நீறார்திரு மேனிய ரூனமி லார்பால் ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான் வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே.

356

செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக் கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும் அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே.

357

விடத்தார் திகழும்மிட றன்நட மாடி படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே.

358

வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும் பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம் அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே.

359

தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல் வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே.

360

அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல் கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன் பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய் விரவாகுவர் வானிடை வீடெளி தாமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. அன்பில் என வழங்கப்பெறும். சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.