Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.

திருஞானசம்பந்தர்

1.44

திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது. பண் - தக்கராகம்

470

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்துப் பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ வாரிடமும் பலி தேர்வர் அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வ தோயிவர் மாண்பே.

471

கலைபுனை மானுரி தோலுடை யாடை கனல்சுட ராலிவர் கண்கள் தலையணி சென்னியர் தாரணி மார்பர் தம்மடி கள்ளிவ ரென்ன அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற இலைபுனை வேலரோ ஏழையை வாட இடர்செய்வ தோயிவ ரீடே.

472

வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்ணூல் நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக நண்ணுவர் நம்மை நயந்து மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதைசெய்வ தோவிவர் சீரே.

473

கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக் கனல்தரு தூமதிக் கண்ணி புனமலர் மாலை யணிந் தழகாய புனிதர் கொலாமிவ ரென்ன வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற மனமலி மைந்தரோ மங்கையை வாட மயல்செய்வ தோவிவர் மாண்பே.

474

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே.

475

நீறுமெய்பூசி நிறைசடை தாழ நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி ஆறது சூடி ஆடர வாட்டி யைவிரற் கோவண ஆடை பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற ஏறது ஏறியர் ஏழையை வாட இடர்செய்வ தோவிவ ரீடே.

476

பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ டாமைவெண் ணூல்புனை கொன்றை கொங்கிள மாலை புனைந் தழகாய குழகர்கொ லாமிவ ரென்ன அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் சதிர்செய்வ தோவிவர் சார்வே.

477

ஏவலத் தால்விச யற்கருள் செய்து இராவண னையீ டழித்து மூவரி லும்முத லாய்நடு வாய மூர்த்தியை யன்றி மொழியாள் யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதைசெய்வ தோவிவர் சேர்வே.

478

மேலது நான்முக னெய்திய தில்லை கீழது சேவடி தன்னை நீலது வண்ணனு மெய்திய தில்லை எனவிவர் நின்றது மல்லால் ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் பழிசெய்வ தோவிவர் பண்பே.

479

நாணொடு கூடிய சாயின ரேனும் நகுவ ரவரிரு போதும் ஊணொடு கூடிய உட்குந் தகையார் உரைக ளவைகொள வேண்டா ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப் புனைசெய்வ தோவிவர் பொற்பே.

480

அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிரா மத்துறை கின்ற புகைமலி மாலை புனைந் தழகாய புனிதர்கொ லாமிவ ரென்ன நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச் சாரகி லாவினை தானே.

முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின் மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.