Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.53 திருமுதுகுன்றம்

திருஞானசம்பந்தர்

1.53

திருமுதுகுன்றம் பண் - பழந்தக்கராகம்

570

தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர் நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும் மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும் மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.

571

பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார் எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள் முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.

572

வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில் சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர் மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே.

573

பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர் நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும் நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும் ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே.

574

வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச் செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத் தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே.

575

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும் அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. (*) இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

576

மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும் இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள் முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.

577

ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக் கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால் ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும் மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே.

578

உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின் மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே.

579

மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன் .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... ....

11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.