திருக்கோளிலி பண் - பழந்தக்கராகம்
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.62 திருக்கோளிலி
திருஞானசம்பந்தர்
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங் கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.
ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில் கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண் டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல் கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான் கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.
வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ் சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத் தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக் கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.
வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால் நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும் பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான் கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே.
கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான் சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான் மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற் கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.
அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச் சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங் கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.
நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத் தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.
தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல் இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள் நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல் கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே.
நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங் கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண் டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கோளிலியப்பர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.