திருப்பூவணம் பண் - தக்கேசி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.64 திருப்பூவணம்
திருஞானசம்பந்தர்
அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல் குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம் முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந் திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே.
மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர் கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர்காத்தளித்த திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப்பூவணமே.
போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணிமேனியனாய்க் காரார்கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர் பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணிபொன்கொழித்துச் சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே.
கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர்வார்குழையன் கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவணவன்னிடமாம் படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற்பரவச் செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே.
கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதிற்கூட்டழித்த போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம் ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத் தேரார்வீதி மாடம்நீடுந் தென்திருப்பூவணமே.
நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங் குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல் தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப்பூவணமே.
பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம்போற்றிசைப்ப மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந்தானிடமாம் கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கிச் செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப்பூவணமே.
மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக் கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம் பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணிபொன்கொழித்து ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்பூவணமே.
பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங் கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரியானவனூர் மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்துச் செய்யார்கமலந் தேனரும்புந் தென்திருப்பூவணமே.
அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம் மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப்பூவணமே.
திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்பூவணத்துப் பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல்இன்றமிழால் நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே.
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.