திருக்குற்றாலம் பண் - குறிஞ்சி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.99 திருக்குற்றாலம்
திருஞானசம்பந்தர்
வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக் கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம் அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்.
பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக் கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங் கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய் அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள்.
செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக் கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம் வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்.
பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன் கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம் அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும் நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம் இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.
மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக் கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங் கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம் பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக் கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங் காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ் சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.
போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக் கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம் மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம் பிரமன்னோடு மாலறியாத பெருமையெம் பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.
பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக் குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம் இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.
மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன் கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம் நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன் பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - குறும்பலாவீசுவரர், தேவியார் - குழல்வாய்மொழியம்மை.