Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.100 திருக்கோவலூர் வீரட்டம் - திருவிராகம்

திருஞானசம்பந்தர்

2.100

திருக்கோவலூர் வீரட்டம் - திருவிராகம் பண் - நட்டராகம்

1081

படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண் இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள் விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.

1082

கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த் திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர் குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர் விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.

1083

உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல் அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள் வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.

1084

கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும் இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன் பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர் வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.

1085

உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண் துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.

1086

கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும் ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங் கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள் வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.

1087

உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண் நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால் வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.

1088

ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல் போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள் வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.

1089

ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில் நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.

1090

குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும் அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல் பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில் வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.

1091

கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன் பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால் அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில் விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - சிவானந்தவல்லியம்மை.