Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.103 திரு அம்பர்த்திருமாகாளம்

திருஞானசம்பந்தர்

2.103

திரு அம்பர்த்திருமாகாளம் பண் - நட்டராகம்

1114

புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப் பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய் தவர்மேய மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க் கருவினை அடையாவே.

1115

அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள் அங்கையில் அனலேந்தி இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக ளிசைவன பலபூதம் மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் பயன்தலைப் படுவாரே.

1116

குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் குரைகழ லடிசேரக் கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் கருத்தறிந் தவர்மேய மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை வல்வினை அடையாவே.

1117

எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் இழைவளர் நறுங்கொன்றை தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் தாமகிழ்ந் தவர்மேய மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளங் கங்கு லும்பக லுந்தொழும் அடியவர் காதன்மை யுடையாரே.

1118

நெதியம் என்னுள போகமற் றென்னுள நிலமிசை நலமாய கதியம் என்னுள வானவர் என்னுளர் கருதிய பொருள்கூடில் மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் டேத்துதல் புரிந்தோர்க்கே.

1119

கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் கனல்விடு சுடர்நாகந் தெண்ணி லாவொடு திலதமு நகுதலை திகழவைத் தவர்மேய மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் வுலகினில் உயர்வாரே.

1120

தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் சுடர்விடு நறுங்கொன்றை பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் புகழ்புரிந் தவர்மேய மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற் பெருமையைப் பெறுவாரே.

1121

பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப் பருவரைக் கீழூன்றி எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த இறையவன் உறைகோயில் மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளங் கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை கனலிடைச் செதிளன்றே.

1122

உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின் ஒளிகிளர் மலரோனும் பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும் பரவநின் றவர்மேய மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளங் கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் கவலையுங் களைவாரே.

1123

பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும் பீலிகொண் டுழல்வாருங் கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங் கழறநின் றவர்மேய வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே.

1124

மாறு தன்னொடு மண்மிசை யில்லது வருபுனல் மாகாளத் தீறும் ஆதியு மாகிய சோதியை ஏறமர் பெருமானை நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம் பந்தன தமிழ்மாலை கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் குற்றங்கள் குறுகாவே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காளகண்டேசுவரர், தேவியார் - பட்சநாயகியம்மை.