திருப்புகலி பண் - செவ்வழி
இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
2.122 திருப்புகலி
திருஞானசம்பந்தர்
விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார் படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம் புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே.
வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார் ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச் சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.
வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித் துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.
திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க் கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற் புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே.
ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர் நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப் பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே.
தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள் புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே. (*) இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.
தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன் தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார் பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.
கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க் காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற் பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே.
தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர் இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர் அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே.
எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக் கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர் செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில் எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே.