Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.15 திருக்காறாயில்

திருஞானசம்பந்தர்

2.15

திருக்காறாயில் பண் - இந்தளம்

154

நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத் தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ் சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.

155

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர் விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும் நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற் பதியானே யென்பவர் பாவமி லாதாரே.

156

விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர் மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங் கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில் எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.

157

தாயானே தந்தையு மாகிய தன்மைகள் ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில் மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.

158

கலையானே கலைமலி செம்பொற் கயிலாய மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில் நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.

159

ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும் போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில் நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.

160

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள் ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர் காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில் ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

161

கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம் எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர் கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில் அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

162

பிறையானே பேணிய பாடலோ டின்னிசை மறையானே மாலொடு நான்முகன் காணாத இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில் உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.

163

செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும் படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில் குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.

164

ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில் ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல் வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர், தேவியார் - கயிலாயநாயகியம்மை.