Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.22 திருக்குடவாயில்

திருஞானசம்பந்தர்

2.22

திருக்குடவாயில் பண் - இந்தளம்

230

திகழுந் திருமா லொடுநான் முகனும் புகழும் பெருமான் அடியார் புகல மகிழும் பெருமான் குடவா யில்மன்னி நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.

231

ஓடுந் நதியும் மதியோ டுரகம் சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல் கூடுங் குழகன் குடவா யில்தனில் நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.

232

கலையான் மறையான் கனலேந் துகையான் மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான் கொலையார் சிலையான் குடவா யில்தனில் நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.

233

சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா நலமென் முலையாள் நகைசெய் யநடங் குலவுங் குழகன் குடவா யில்தனில் நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.

234

என்றன் உளமே வியிருந் தபிரான் கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக் குன்றன் குழகன் குடவா யில்தனில் நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.

235

அலைசேர் புனலன் னனலன் னமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிருங் கொலைசேர் படையன் குடவா யில்தனில் நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.

236

அறையார் கழலன் னமலன் னியலிற் பறையாழ் முழவும் மறைபா டநடங் குறையா அழகன் குடவா யில்தனில் நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.

237

வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ் வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான் வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும் வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

238

பொன்னொப் பவனும் புயலொப் பவனுந் தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான் கொன்னற் படையான் குடவா யில்தனில் மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

239

வெயிலின் நிலையார் விரிபோர் வையினார் பயிலும் முரையே பகர்பா விகள்பாற் குயிலன் குழகன் குடவா யில்தனில் உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.

240

கடுவாய் மலிநீர் குடவா யில்தனில் நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை தடமார் புகலித் தமிழார் விரகன் வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கோணேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.