Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.25 திருப்புகலி

திருஞானசம்பந்தர்

2.25

திருப்புகலி பண் - இந்தளம்

262

உகலி யாழ்கட லோங்கு பாருளீர் அகலி யாவினை யல்லல் போயறும் இகலி யார்புர மெய்த வன்னுறை புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.

263

பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக் கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப் புண்ணி யன்னுறை யும்பு கலியை நண்ணு மின்னல மான வேண்டிலே.

264

வீசு மின்புரை காதன் மேதகு பாச வல்வினை தீர்த்த பண்பினன் பூசு நீற்றினன் பூம்பு கலியைப் பேசு மின்பெரி தின்ப மாகவே.

265

கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன் படிகொள் பாரிடம் பேசும் பான்மையன் பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள் அடிகளை யடைந் தன்பு செய்யுமே.

266

பாதத் தாரொலி பல்சி லம்பினன் ஓதத் தார்விட முண்ட வன்படைப் பூதத் தான்புக லிந்ந கர்தொழ ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.

267

மறையி னான்ஒலி மல்கு வீணையன் நிறையி னார்நிமிர் புன்ச டையனெம் பொறையி னானுறை யும்பு கலியை நிறையி னாற்றொழ நேச மாகுமே.

268

கரவி டைமனத் தாரைக் காண்கிலான் இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை பொருவி டைஉயர்த் தான்பு கலியைப் பரவி டப்பயில் பாவம் பாறுமே.

269

அருப்பி னார்முலை மங்கை பங்கினன் விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும் பொருப்பி னான்பொழி லார்பு கலியூர் இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.

270

மாலும் நான்முகன் றானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலு மேனியன் பூம்பு கலியுள் பால தாடிய பண்ப னல்லனே.

271

நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல் ஒன்ற தாகவை யாவு ணர்வினுள் நின்ற வன்னிக ழும்பு கலியைச் சென்று கைதொழச் செல்வ மாகுமே.

272

புல்ல மேறிதன் பூம்பு கலியை நல்ல ஞானசம் பந்தன் நாவினாற் சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க் கில்லை யாம்வினை இருநி லத்துளே.