Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.33 திருநள்ளாறு - திருவிராகம்

திருஞானசம்பந்தர்

2.33

திருநள்ளாறு - திருவிராகம் பண் - இந்தளம்

350

ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர் கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.

351

விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல் பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள் நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.

352

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத் துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர் வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.

353

கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச் செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப் புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.

354

நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார் வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர் அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே.

355

பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங் காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங் கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர் நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.

356

நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும் ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.

357

கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும் அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.

358

உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம் பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர் வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும் நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.

359

சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும் பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர் மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச் சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.

360

ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும் நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல் பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.