திருச்சாய்க்காடு பண் - இந்தளம்
இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
2.38 திருச்சாய்க்காடு
திருஞானசம்பந்தர்
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச் சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில் மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.
பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும் வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில் கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித் தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.
நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில் ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே.
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார் புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித் தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.
ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில் மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந் தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே.
துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில் அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில் வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ் சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே.
வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர் ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில் மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத் தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே.
இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில் மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந் தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.
மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில் சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.
ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும் ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில் வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.
ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும் ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய் வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சாயாவனேசுவரர், தேவியார் - குயிலுநன்மொழியம்மை.