திருநணா பண் - காந்தாரம்
இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
2.72 திருநணா
திருஞானசம்பந்தர்
பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேற தேறி அந்தார் அரவணிந்த அம்மா னிடம்போலும் அந்தண் சாரல் வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச் செந்தேன் தெளியொளிரத் தேமாக் கனியுதிர்க்குந் திருந ணாவே.
நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணை யேந்தி ஈட்டுந் துயரறுக்கும் எம்மா னிடம்போலு மிலைசூழ் கானில் ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூ ழோசைச் சேட்டார் மணிகள் அணியுந் திரைசேர்க்குந் திருந ணாவே.
நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞால மேத்த மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க் கிடம்போலும் விரைசூழ் வெற்பில் குன்றோங்கி வன்றிரைகள் மோத மயிலாலுஞ் சாரற் செவ்வி சென்றோங்கி வானவர்க ளேத்தி அடிபணியுந் திருந ணாவே.
கையில் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் கிடம்போலு மிடைந்து வானோர் ஐய ரவரெம் பெருமா னருளென்றென் றாத ரிக்கச் செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருந ணாவே.
முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த அத்தேன் அளியுண் களியா லிசைமுரல ஆலத் தும்பி தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருந ணாவே.
வில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடங் கொண்டு புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியு மானும் அல்லாத சாதிகளு மங்கழல்மேற் கைகூப்ப அடியார் கூடிச் செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருந ணாவே.
கானார் களிற்றுரிவை மேல்மூடி ஆடரவொன் றரைமேற் சாத்தி ஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த கோயி லெங்கும் நானா விதத்தால் விரதிகள்நன் னாமமே யேத்தி வாழ்த்தத் தேனார் மலர்கொண் டடியார் அடிவணங்குந் திருந ணாவே.
மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலா லூன்றி முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் கிடம்போலும் முநனைசேர் சீயம் அன்னீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியு முன்றில் செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருந ணாவே.
மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைக டோ றும் கையார் பலியேற்ற கள்வன் இடம்போலுங் கழல்கள் நேடிப் பொய்யா மறையானும் பூமி யளந்தானும் போற்ற மன்னிச் செய்யார் எரியாம் உருவ முறவணங்குந் திருந ணாவே.
ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல் பேசி மூடு உருவம் உகந்தார் உரையகற்றும் மூர்த்தி கோயில் ஓடு நதிசேரும் நித்திலமும் மொய்த்தகிலுங் கரையில் சாரச் சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளிபெருகுந் திருந ணாவே.
கல்வித் தகத்தால் திரைசூழ் கடற்காழிக் கவுணி சீரார் நல்வித் தகத்தால் இனிதுணரும் ஞானசம் பந்தன் எண்ணுஞ் சொல்வித் தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல் வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே.
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப் பெயர் வழங்கப்படுகின்றது. சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர், தேவியார் - வேதமங்கையம்மை.