Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.111 திருவீழிமிழலை ஈரடி

திருஞானசம்பந்தர்

3.111

திருவீழிமிழலை ஈரடி பண் - பழம்பஞ்சுரம்

1190

வேலி னேர்தரு கண்ணி னாளுமை பங்க னங்கணன் மிழலை மாநகர் ஆல நீழலின் மேவி னானடிக் கன்பர் துன்பிலரே.

1191

விளங்கு நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர்வளர் மிழலை யானடி உளங்கொள் வார்தமை உளங்கொள் வார்வினை ஒல்லை யாசறுமே.

1192

விசையி னோடெழு பசையு நஞ்சினை யசைவு செய்தவன் மிழலை மாநகர் இசையு மீசனை நசையின் மேவினான் மிசை செயாவினையே.

1193

வென்றி சேர்கொடி மூடு மாமதில் மிழலை மாநகர் மேவி நாடொறும் நின்ற ஆதிதன் அடிநி னைப்பவர் துன்ப மொன்றிலரே.

1194

போத கந்தனை யுரிசெய் தோன்புயல் நேர்வ ரும்பொழில் மிழலை மாநகர் ஆத ரஞ்செய்த அடிகள் பாதம லாலோர் பற்றிலமே.

1195

தக்கன் வேள்வியைச் சாடி னார்மணி தொக்க மாளிகை மிழலை மேவிய நக்க னாரடி தொழுவர் மேல்வினை நாடொ றுங்கெடுமே.

1196

போர ணாவுமுப் புரமெ ரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மாநகர்ச் சேரு மீசனைச் சிந்தை செய்பவர் தீவி னைகெடுமே.

1197

இரக்க மிற்றொழில் அரக்க னாருடல் நெருக்கி னான்மிகு மிழலை யானடி சிரக்கொள் பூவென ஒருக்கி னார்புகழ் பரக்கும் நீள்புவியே.

1198

துன்று பூமகன் பன்றி யானவன் ஒன்று மோர்கிலா மிழலை யானடி சென்று பூம்புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே.

1199

புத்தர் கைச்சமண் பித்தர் பொய்க்குவை வைத்த வித்தகன் மிழலை மாநகர் சித்தம் வைத்தவர் இத்த லத்தினுள் மெய்த்த வத்தவரே.

1200

சந்த மார்பொழில் மிழலை யீசனைச் சண்பை ஞானசம் பந்தன் வாய்நவில் பந்த மார்தமிழ் பத்தும் வல்லவர் பத்த ராகுவரே.