Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.120 திருஆலவாய்

திருஞானசம்பந்தர்

3.120

திருஆலவாய் பண் - புறநீர்மை

1290

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.

1291

வெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங் கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும் ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை யொழிந்திட் டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே.

1292

செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும் பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவுஞ் சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.

1293

கணங்களாய் வரினுந் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால் குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில் மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.

1294

செய்யதா மரைமேல் அன்னமே யனைய சேயிழை திருநுதற் செல்வி பையர வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான் விரிகதிர் மழுவுடன் தரித்த ஐயனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.

1295

நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவுங் கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன் அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.

1296

முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப் பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல் அத்தனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.

1297

நாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகுங் கோவணம் பூதி சாதனங் கண்டால் தொழுதெழு குலச்சிறை போற்ற ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள் இருபதும் நெரிதர வூன்றி ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.

1298

மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன்றன் மகளாம் பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரி தாம்வகை நின்ற அண்ணலார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.

1299

தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக் கண்டுநா டோ றும் இன்புறு கின்ற குலச்சிறை கருதிநின் றேத்தக் குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கண் நெறியிடை வாரா அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவா யாவதும் இதுவே.

1300

பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும் அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றிக் கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண் டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.