Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.18 திருவைகன்மாடக்கோயில்

திருஞானசம்பந்தர்

3.18

திருவைகன்மாடக்கோயில் பண் - காந்தாரபஞ்சமம்

187

துளமதி யுடைமறி தோன்று கையினர் இளமதி யணிசடை எந்தை யாரிடம் உளமதி யுடையவர் வைக லோங்கிய வளமதி தடவிய மாடக் கோயிலே.

188

மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர் மையகண் மலைமக ளோடும் வைகிடம் வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச் செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.

189

கணியணி மலர்கொடு காலை மாலையும் பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர் தணியணி உமையொடு தாமுந் தங்கிடம் மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.

190

கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம் வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.

191

விடம்அடை மிடற்றினர் வேத நாவினர் மடமொழி மலைமக ளோடும் வைகிடம் மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க் குடதிசை நிலவிய மாடக் கோயிலே.

192

நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில் திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.

193

எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன் திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை வருமுகி லணவிய மாடக் கோயிலே.

194

மலையன இருபது தோளி னான்வலி தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம் மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள் வலம்வரு மலையன மாடக் கோயிலே.

195

மாலவன் மலரவன் நேடி மால்கொள மாலெரி யாகிய வரதர் வைகிடம் மாலைகொ டணிமறை வாணர் வைகலில் மாலன மணியணி மாடக் கோயிலே.

196

கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர் பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம் மடமுடை யவர்பயில் வைகல் மாநகர் வடமலை யனையநன் மாடக் கோயிலே.

197

மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச் சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம் பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வைகனாதேசுவரர், தேவியார் - வைகலம்பிகையம்மை.