Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.32 திருஏடகம்

திருஞானசம்பந்தர்

3.32

திருஏடகம் பண் - கொல்லி

340

வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன் பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு மன்னிய மறையவர் வழிபட அடியவர் இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.

341

கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி வடிவுற அமைதர மருவிய ஏடகத் தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால் இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே.

342

குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி செண்டலம் பும்விடைச் சேடனூர் ஏடகங் கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.

343

ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில்பெறுங் கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடஞ் சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகஞ் சீலமார் ஏடகஞ் சேர்தலாஞ் செல்வமே.

344

வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக் கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன் பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.

345

பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார் வைகையின் வடகரை மருவிய ஏடகத் தையனை அடிபணிந் தரற்றுமின் அடர்தரும் வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே. (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

346

தடவரை யெடுத்தவன் தருக்கிறத் தோளடர் படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான் மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.

347

பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில் தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற அன்னமாம் அயனுமா லடிமுடி தேடியும் இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.

348

குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள் பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர் வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும் இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத் தெந்தையே.

349

கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர் ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.