Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.74 திருத்தேவூர் - திருவிராகம்

திருஞானசம்பந்தர்

3.74

திருத்தேவூர் - திருவிராகம் பண் - சாதாரி

792

காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல் தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான் நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம்ம றிப்பநலமார் சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ் மாடமிடை தேவூரதுவே.

793

கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவன்னி கொக்கிறகொடும் வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர் வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம்வி ரைக்குமணமார் தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை வொன்றிவரு தேவூரதுவே.

794

பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கன்எமை யாளும்இறைவன் எண்தடவு வானவரி றைஞ்சுகழ லோன்இனிதி ருந்தஇடமாம் விண்தடவு வார்பொழிலு குத்தநற வாடிமலர் சூடிவிரையார் *செண்தடவு மாளிகைசெ றிந்துதிரு வொன்றிவளர் தேவூரதுவே. (* சேண் என்பது செண் எனக் குறுகிநின்றது. )

795

மாசில்மனம் நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர் ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு பாசுபதன் மேவுபதிதான் வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியுந் தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே.

796

கானமுறு மான்மறியன் ஆனையுரி போர்வைகன லாடல்புரிவோன் ஏனஎயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனூர் வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவிப லாநிலவிவார் தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூரதுவே.

797

ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறன்அடை யார்நகர்கள்தான் சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன்நமை யாளும்அரனூர் வீறுமலர் ஊறுமது ஏறிவளர் வாயவிளை கின்றகழனிச் சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள வாளைவரு தேவூரதுவே.

798

கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம் அன்றவிய நின்றுநகைசெய் என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையமர் இன்பநகர்தான் முன்றின்மிசை நின்றபல வின்கனிகள் தின்றுகற வைக்குருளைகள் சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை யாடிவளர் தேவூரதுவே.

799

ஓதமலி கின்றதென் இலங்கையரை யன்மலிபு யங்கள்நெரியப் பாதமலி கின்றவிர லொன்றினில டர்த்தபர மன்றனதிடம் போதமலி கின்றமட வார்கள்நட மாடலொடு பொங்குமுரவஞ் சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே.

800

வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல் நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன் நலங்கொள்பதிதான் வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை யின்மொழியினார் திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை யாழ்மருவு தேவூரதுவே.

801

பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு மெச்சமறு போதியருமா மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான் மைச்சின்முகில் வைச்சபொழில்... ... ... ... ... .. ... ... ... ... .. ... ... ... ... ( இச்செய்யுளின் மற்றையஅடிகள் சிதைந்துபோயின )

802

துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார் செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல் பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய் சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே.