Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.84 திருப்புறவம் - திருவிராகம்

திருஞானசம்பந்தர்

3.84

திருப்புறவம் - திருவிராகம் பண் - சாதாரி

901

பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக் கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர் நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதி புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.

902

கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர் அக்குடை வடமுமோர் அரவமு மலரரை மிசையினிற் திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும் புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே.

903

கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொரு பங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய் தங்கிய கரதல முடையவர் விடையவர் உறைபதி பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.

904

மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியை மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார் சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவரு போதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே.

905

காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில் தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதி ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.

906

சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர் பின்னைய நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட முன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதி புன்னையின் முகைநெதி பொதியவிழ் பொழிலணி புறவமே.

907

வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர் பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர் எரிதரு முருவினர் இமையவர் தொழுவதோ ரியல்பினர் புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே.

908

வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும் நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற ஒசிதர வொருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடி பொசிதரு திருவுரு வுடையவர் உறைபதி புறவமே.

909

தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில் ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும் வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப் போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே.

910

கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர் பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர் நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி பூசுரர் மறைபயில் நிறைபுக ழொலிமலி புறவமே.

911

போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன் ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும் நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.