Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.88 திருவிளமர் - திருவிராகம்

திருஞானசம்பந்தர்

3.88

திருவிளமர் - திருவிராகம் பண் - சாதாரி

945

மத்தக மணிபெற மலர்வதோர் மதிபுரை நுதல்கரம் ஒத்தக நகமணி மிளிர்வதோர் அரவினர் ஒளிகிளர் அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள் வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.

946

பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி ஒட்டில கிணைமர வடியினர் உமையுறு வடிவினர் சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர் விட்டில கழகொளி பெயரவர் உறைவது விளமரே.

947

அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர் சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர் வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.

948

மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப் பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள் பாடலர் ஆடிய சுடலையில் இடமுற நடம்நவில் வேடம துடையவர் வியன்நக ரதுசொலில் விளமரே.

949

பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாக் கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர் விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர் வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.

950

மனைகள்தோ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர் கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர் முனைகெட வருமதில் எரிசெய்த அவர்கழல் பரவுவார் வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.

951

நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல் செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர் பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசை வெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே.

952

தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப் பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர் திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதோர் சேர்வினார் விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.

953

தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற அண்டல்செய் திருவரை வெருவுற ஆரழ லாயினார் கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனில் அளியினம் விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.

954

ஒள்ளியர் தொழுதெழ வுலகினில் உரைசெயு மொழிபல கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவம் அறிகிலார் பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர் வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.

955

வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச் சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம் பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பதஞ்சலிமனோகரேசுவரர், தேவியார் - யாழினுமென்மொழியம்மை.