பசுபதி - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.111 பசுபதி - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் கங்கையென்னுங் காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேற் பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த உத்தமர்கள் இடும்பைப் படாமல் இரங்குகண் டாயிரு ளோடச்செந்தீ அடும்பொத் தனைய அழன்மழு வாவழ லேயுமிழும் படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் பசுபதியே.
தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும் மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால் வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப் பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே.
ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார் அருவினைச் சுற்றம் அகல்விகண் டாயண்ட மேயணவும் பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப் பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே.
இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க் கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்டம் எண்டிசையுஞ் சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை யோடுஞ் சுரும்புதுன்றிப் படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
அடலைக் கடல்கழி வான்நின் னடியிணை யேயடைந்தார் நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் கொன்றை திங்கள் சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா மணிகிடந்து படரச் சுடர்மகு டாயெம்மை யாளும் பசுபதியே.
துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார் மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் மூன்றுடைய அறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு மந்திரத்தேர்ப் பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் பசுபதியே. (*) இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
சித்தத் துருகிச் சிவனெம் பிரானென்று சிந்தையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின் றார்பிணி தீர்த்தருளாய் மத்தத் தரக்கன் இருபது தோளு முடியுமெல்லாம் பத்துற் றுறநெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.