Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.62 திருவாலவாய் - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.62

திருவாலவாய் - திருநேரிசை

599

வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென் றோதியே மலர்கள் தூவி ஒடுங்கிநின் கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும் ஆதியே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.

600

நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தி என்பொனே ஈசா என்றென் றேத்திநான் ஏசற் றென்றும் பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம் அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

601

ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம் பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க் கருமருந் தாகி யுள்ளாய் ஆளும்வல் வினைகள் தீர்க்கும் அருமருந் தால வாயில் அப்பனே அருள்செ யாயே.

602

செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்துஞ் சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன் ஐயனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.

603

வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலிகொண் டென்றும் உண்டது மில்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப் பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளம தார அண்டனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.

604

எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநான் ஏசற் றென்றும் வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற் கஞ்சலென் றால வாயில் அப்பனே அருள்செ யாயே.

605

வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேன்உன் செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள அழகனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.

606

நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம் மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும் அறிவனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.

607

நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்த சிலந்தியை அரச தாள அருளினாய் என்று திண்ணங் கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாக அலந்தனன் ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.

608

பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப் பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன் எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலும் இருப துதோள் அடர்த்தனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.