Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.64 திருவீழிமிழலை - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.64

திருவீழிமிழலை - திருநேரிசை

619

பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் சீதத்திற் பொலிந்த திங்கட் கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர் கீதத்திற் பொலிந்த ஓசைக் கேள்வியர் வேள்வி யாளர் வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

620

காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர் மாலையின் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் ஆலையிற் பாகும் போல அண்ணித்திட் டடியார்க் கென்றும் வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

621

வருந்தின நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆற்கீழ் இருந்துநன் பொருள்கள் நால்வர்க் கியம்பினர் இருவ ரோடும் பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யரா மவர்கட் கென்றும் விருந்தினர் திருந்து வீழி மிழலையுள் விகிர்த னாரே.

622

நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச் சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள் தலையினாற் றரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்ட விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

623

மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனர் கறவிடைப் பாலின் நெய்யர் கரும்பினிற் கட்டி யாளர் பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையுள் நீரர் விறகிடைத் தீயர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

624

எண்ணகத் தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்ற பெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவ ராகி மண்ணகத் தைவர் நீரில் நால்வர்தீ யதனில் மூவர் விண்ணகத் தொருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

625

சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர் எந்தையும் எந்தை தந்தை தந்தையு மாய ஈசர் அந்தியோ டுதயம் அந்த ணாளர்ஆன் நெய்யால் வேட்கும் வெந்தழ லுருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

626

நீற்றினை நிறையப் பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு ஏற்றுழி ஒருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்ட ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில் வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

627

சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடஞ் சென்று கூடப் பத்திசெய் பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்பி லாளர் முத்திசை பவள மேனி முதிரொளி நீல கண்டர் வித்தினில் முளையர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

628

தருக்கின அரக்கன் தேரூர் சாரதி தடைநி லாது பொருப்பினை யெடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய் நெரிப்புண்டங் கலறி மீண்டு நினைந்தடி பரவத் தம்வாள் விருப்பொடுங் கொடுப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீழியழகீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகையம்மை.