தனித் - திருநேரிசை
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.77 தனித் - திருநேரிசை
திருநாவுக்கரசர்
கடும்பகல் நட்ட மாடிக் கையிலோர் கபால மேந்தி இடும்பலிக் கில்லந் தோறு முழிதரும் இறைவ னீரே நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தற் கொடுங்குழை புகுந்த வன்றுங் கோவண மரைய தேயோ.
கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறுந் தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்த வாறும் பூவணக் கிழவ னாரைப் புலியுரி அரைய னாரை ஏவணச் சிலையி னாரை யாவரே எழுது வாரே.
விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகுந் துளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் ணேற லாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும் அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே.
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்றன் மந்திரம் நமச்சி வாய ஆகநீ றணியப் பெற்றால் வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே.
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார் முள்ளுடை யவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே.
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நாளும் பெரியதோர் அவாவிற் பட்டேன் அண்டனே அமரர் கோவே அறிவனே அஞ்ச லென்னாய் தெண்டிரைக் கங்கை சூடுந் திகழ்தரு சடையி னானே.
பாறினாய் பாவி நெஞ்சே பன்றிபோல் அளற்றிற் பட்டுத் தேறிநீ நினைதி யாயின் சிவகதி திண்ண மாகும் ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே யொழுகும் வாசல் கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதி னாயே. (*) இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
உய்த்தகால் உதயத் தும்பர் உமையவள் நடுக்கந் தீர வைத்தகா லரக்க னோதன் வான்முடி தனக்கு நேர்ந்தான் மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள் மூர்த்தியெ னுச்சி தன்மேல் வைத்தகால் வருந்து மென்று வாடிநான் ஒடுங்கி னேனே.