Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.87 திருப்பழனம் - திருவிருத்தம்

திருநாவுக்கரசர்

4.87

திருப்பழனம் - திருவிருத்தம்

833

மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம் ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவையறுப்பான் பாவித்த பாவனை நீயறி வாய்பழ னத்தரசே கூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே.

834

சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில் மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப் பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான் உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

835

ஆடிநின் றாயண்டம் ஏழுங் கடந்துபோய் மேலவையுங் கூடிநின் றாய்குவி மென்முலை யாளையுங் கொண்டுடனே பாடிநின் றாய்பழ னத்தர சேயங்கோர் பால்மதியஞ் சூடிநின் றாயடி யேனையஞ் சாமைக் குறிக்கொள்வதே.

836

எரித்துவிட் டாய்அம்பி னாற்புர மூன்றுமுன் னேபடவும் உரித்துவிட் டாய்உமை யாள்நடுக் கெய்தவோர் குஞ்சரத்தைப் பரித்துவிட் டாய்பழ னத்தர சேகங்கை வார்சடைமேற் தரித்துவிட் டாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

837

முன்னியும் முன்னி முளைத்தன மூவெயி லும்முடனே மன்னியு மங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் பன்னிய நூலின் பரிசறி வாய்பழ னத்தரசே உன்னியும் உன்னடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

838

ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந் தேபடைத் தான்றலையைக் காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று காமனைக் காலனையும் பாய்ந்தறுத் தாய்பழ னத்தர சேயென் பழவினைநோய் ஆய்ந்தறுத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

839

மற்றுவைத் தாயங்கோர் மாலொரு பாகம் மகிழ்ந்துடனே உற்றுவைத் தாய்உமை யாளொடுங் கூடும் பரிசெனவே பற்றிவைத் தாய்பழ னத்தர சேயங்கோர் பாம்பொருகை சுற்றிவைத் தாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

840

ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண் டாரையும் ஒள்ளழலாற் போரினின் றாய்பொறை யாயுயி ராவி சுமந்துகொண்டு பாரிநின் றாய்பழ னத்தர சேபணி செய்பவர்கட் காரநின் றாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

841

போகம்வைத் தாய்புரி புன்சடை மேலோர் புனலதனை ஆகம்வைத் தாய்மலை யான்மட மங்கை மகிழ்ந்துடனே பாகம்வைத் தாய்பழ னத்தர சேயுன் பணியருளால் ஆகம்வைத் தாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

842

அடுத்திருந் தாய்அரக் கன்முடி வாயொடு தோள்நெரியக் கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை யோடுடனே படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி யின்னுரிதோல் உடுத்திருந் தாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.