திருவையாறு - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.93 திருவையாறு - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன நீணிலத்துப் புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல கம்மளிக்கும் அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ யாறன் அடித்தலமே.
பொலம்புண் டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார் புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன பொன்னனைய சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் கிணித்திரளும் அலம்பும் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே.
உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன ஓதிநன்னூல் கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும் அற்றார்க் கரும்பொருள் காண்கஐ யாறன் அடித்தலமே.
வானைக் கடந்தண்டத் தப்பால் மதிப்பன மந்திரிப்பார் ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன உத்தமர்க்கு ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்ச ஆனை யுரித்தன காண்கஐ யாறன் அடித்தலமே.
மாதர மானில மாவன வானவர் மாமுகட்டின் மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார் தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க் காதர மாவன காண்கஐ யாறன் அடித்தலமே.
பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால் ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல் மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி ஆணிக் கனகமு மொக்கும்ஐ யாறன் அடித்தலமே.
ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்த வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணுஞ் சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ டாதியும் அந்தமு மானஐ யாறன் அடித்தலமே.
சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண் டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பிநின்று வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் காந்தளொண்போ தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ யாறன் அடித்தலமே.
சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும் நிழலா வனவென்று நீங்காப் பிறவி நிலைகெடுத்துக் கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த அழலார் ஒளியன காண்கஐ யாறன் அடித்தலமே.
வலியான் றலைபத்தும் வாய்விட் டலற வரையடர்த்து மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கள்முன்னே பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் பலர்இகழ அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே.