Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.13 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.13

திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை

126

என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல் நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன் செம்பொ னேதிரு வீழி மிழலையுள் அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே.

127

கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள் அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே.

128

ஞால மேவிசும் பேநலந் தீமையே கால மேகருத் தேகருத் தாற்றொழுஞ் சீல மேதிரு வீழி மிழலையுள் கோல மேயடி யேனைக் குறிக்கொளே.

129

முத்த னேமுதல் வாமுகி ழும்முளை ஒத்த னேயொரு வாவுரு வாகிய சித்த னேதிரு வீழி மிழலையுள் அத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

130

கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம் ஒருவ னேஉயிர்ப் பாய்உணர் வாய்நின்ற திருவ னேதிரு வீழி மிழலையுள் குருவ னேயடி யேனைக் குறிக்கொளே.

131

காத்த னேபொழி லேழையுங் காதலால் ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை சேர்த்த னேதிரு வீழி மிழலையுள் கூத்த னேயடி யேனைக் குறிகொளே.

132

நீதி வானவர் நித்தல் நியமஞ்செய் தோதி வானவ ரும்முண ராததோர் வேதி யாவிகிர் தாதிரு வீழியுள் ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே.

133

பழகி நின்னடி சூடிய பாலனைக் கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய அழக னேயணி வீழி மிழலையுள் குழக னேயடி யேனைக் குறிக்கொளே.

134

அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ் சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன் விண்ட வான்பொழில் வீழி மிழலையுள் கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே.

135

ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம் வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய திருத்த னேதிரு வீழி மிழலையுள் அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே.