திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.15 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் வைகும் அயலெலாம் இறைவன் எங்கள் பிரானிடை மருதினில் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.
மனத்துள் மாயனை மாசறு சோதியைப் புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை எனக்குத் தாயையெம் மானிடை மருதனை நினைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ளமே.
வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங் கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை எண்டி சைக்கும் இடைமரு தாவென விண்டு போயறும் மேலை வினைகளே.
துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோ டணைய லாவதெ மக்கரி தேயெனா இணையி லாஇடை மாமரு தில்லெழு பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.
மண்ணை யுண்டமால் காணான் மலரடி விண்ணை விண்டயன் காணான் வியன்முடி மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல் பண்ணை யாயமுந் தானும் பயிலுமே.
மங்கை காணக் கொடார்மண மாலையைக் கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை நங்கை மீர்இடை மருதரிந் நங்கைக்கே எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே. இப்பதிகத்தில் 7,8,9,10,11-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.