Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.46 திருப்புகலூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.46

திருப்புகலூர் - திருக்குறுந்தொகை

458

துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ மின்னக் கன்னவெண் டிங்களைப் பாம்புடன் என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே.

459

இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும் நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப் புரைப்பி லாத பொழிற்புக லூரரை உரைக்கு மாசொல்லி ஒள்வளை சோருமே.

460

ஊச லாம்அர வல்குலென் சோர்குழல் ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர் ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று பூசல் நாமிடு தும்புக லூரர்க்கே.

461

மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத் தன்னை நேரொப் பிலாத தலைவனைப் புன்னைக் கானற் பொழில்புக லூரனை என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே.

462

விண்ணி னார்மதி சூடிய வேந்தனை எண்ணி நாமங்கள் ஓதி எழுத்தஞ்சுங் கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனிற் புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே.

463

அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு பண்டு நான்மறை யோதிய பாடலன் தொண்ட ராகித் தொழுது மதிப்பவர் புண்ட ரீகத்து ளார்புக லூரரே.

464

தத்து வந்தலை கண்டறி வாரிலை தத்து வந்தலை கண்டவர் கண்டிலர் தத்து வந்தலை நின்றவர்க் கல்லது தத்து வன்னலன் தண்புக லூரனே.

465

பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர் கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர் வருங்கை யானை மதகளி றஞ்சினைப் பொருங்கை யானைகண் டீர்புக லூரரே.

466

பொன்னொத் தநிறத் தானும் பொருகடல் தன்னொத் தநிறத் தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழிற்புக லூரரை என்னத் தாவென என்னிடர் தீருமே.

467

மத்த னாய்மதி யாது மலைதனை எத்தி னான்றிரள் தோள்முடி பத்திற ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும் பொத்தி னான்புக லூரைத் தொழுமினே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.