Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.67 திருவாஞ்சியம் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.67

திருவாஞ்சியம் - திருக்குறுந்தொகை

674

படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள் உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம் புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம் அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.

675

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல திறத்த வும்முடை யோர்திக ழும்பதி கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.

676

புற்றி லாடர வோடு புனல்மதி தெற்று செஞ்சடைத் தேவர் பிரான்பதி சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம் பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.

677

அங்க மாறும் அருமறை நான்குடன் தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர் செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியந் தங்கு வார்நம் மமரர்க் கமரரே.

678

நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை ஆறு சூடும் அடிகள் உறைபதி மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியந் தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.

679

அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க் குற்ற நற்றுணை யாவான் உறைபதி தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங் கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.

680

அருக்கன் அங்கி நமனொடு தேவர்கள் திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர் ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம் அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே. (*) இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர், தேவியார் - வாழவந்தஅம்மை.