திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.71 திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ் வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே இசைய மங்கையுந் தானுமொன் றாயினான் விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.
ஆதி நாதன் அடல்விடை மேலமர் பூத நாதன் புலியத ளாடையன் வேத நாதன் விசயமங் கையுளான் பாத மோதவல் லார்க்கில்லை பாவமே.
கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில் வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை உள்ளி டத்துறை கின்ற உருத்திரன் கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.
திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம் அசைய வங்கெய்திட் டாரழ லூட்டினான் விசைய மங்கை விருத்தன் புறத்தடி விசையின் மங்கி விழுந்தனன் காலனே.
பொள்ள லாக்கை அகத்திலைம் பூதங்கள் கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள் விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான் உள்ள நோக்கியெ னுள்ளுள் உறையுமே.
கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச் செல்வ போற்றியென் பாருக்குத் தென்றிசை எல்லை யேற்றலும் இன்சொலு மாகுமே.
கண்பல் உக்கக் கபாலம்அங் கைக்கொண்டு உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.
பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை ஆண்ட வன்னடி யேநினைந் தாசையாற் காண்ட லேகருத் தாகி யிருப்பனே.
வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள் வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப் பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே.
இலங்கை வேந்தன் இருபது தோளிற விலங்கள் சேர்விர லான்விச யமங்கை வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும் நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - விசையநாதேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை.