Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.77 திருச்சேறை - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.77

திருச்சேறை - திருக்குறுந்தொகை

770

பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங் கூரி தாய அறிவுகை கூடிடுஞ் சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி நாரி பாகன்றன் நாமம் நவிலவே.

771

என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள் செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.

772

பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ் சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல் மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.

773

மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர் ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள் சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய ஆட லான்றன் அடியடைந் துய்ம்மினே.

774

எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன் துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன் திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

775

தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென் ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

776

வைத்த மாடும் மடந்தைநல் லார்களும் ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார் சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே.

777

குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

778

பழகி னால்வரும் பண்டுள சுற்றமும் விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

779

பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான் வருந்த வூன்றி மலரடி வாங்கினான் திருந்து சேறையிற் செந்நெறி மேவியங் கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - செந்நெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.