Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.90 தனி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.90

தனி - திருக்குறுந்தொகை

885

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.

886

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

887

ஆளா காராளா னாரை அடைந்துய்யார் மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் *தோளா தசுரை யோதொழும் பர்செவி வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. * தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்

888

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிர மாணமே கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

889

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

890

குறிக ளுமடை யாளமுங் கோயிலும் நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் பொறியி லீர்மன மென்கொல் புகாததே.

891

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

892

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.

893

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப ரவர்தமை நாணியே.

894

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.