திருக்கழிப்பாலை பண் - நட்டராகம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.23 திருக்கழிப்பாலை பண் - நட்டராகம்
சுந்தரமூர்த்தி நாயனார்
செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும் அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமே முடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும் வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே.
எங்கே னும்மிருந்துன் அடியே னுனைநினைந்தால் அங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.
ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டங் கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர் அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன் விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற் கரும்பா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.
ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித் தெழிப்பாய் மோதுவிப்பாய் விலையா வணமுடையாய் கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற் கழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே.
ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற் போர்த்தாய் ஆனையின்றோல் உரிவை புலால்நாறக் காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப் பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே.
பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள் உரித்தாய் ஆனையின்றோல் உலகந்தொழும் உத்தமனே எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங் கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய் அடர்த்தாய் வல்லரக்கன் றலைபத்தொடு தோள்நெரியக் கடற்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.
பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான் செய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான் மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே.
பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி கழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத் தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் வழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - பொற்பதவேதநாயகியம்மை.