Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.31 திருஇடையாற்றுத்தொகை பண் - கொல்லி

சுந்தரமூர்த்தி நாயனார்

7.31

திருஇடையாற்றுத்தொகை பண் - கொல்லி

310

முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம் சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர் பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

311

சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர் ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப் பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர் எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.

312

கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம் விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே.

313

கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம் பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர் கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

314

நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர் மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

315

திங்களூர் திருவா திரையான் பட்டினமூர் நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர் தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.

316

கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன் தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல் எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.

317

தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர் பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

318

பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர் தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர் கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல் ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

319

ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன் தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக் கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.