திருப்புகலூர் பண் - கொல்லி
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.34 திருப்புகலூர் பண் - கொல்லி
சுந்தரமூர்த்தி நாயனார்
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் சார்வினுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் இம்மையேதருஞ் சோறுங்கூறையும் ஏத்தலாமிடர் கெடலுமாம் அம்மையேசிவ லோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
மிடுக்கிலாதானை வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங்கொடுப் பாரிலை பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அடுக்குமேலம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
காணியேற்பெரி துடையனேகற்று நல்லனேசுற்றம் நற்கிளை பேணியேவிருந் தோம்புமேயென்று பேசினுங்கொடுப் பாரிலை பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண் புகலூர்பாடுமின் புலவீர்காள் ஆணியாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல் நடுங்கிநிற்குமிக் கிழவனை வரைகள்போல்திரள் தோளனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அரையனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப் பாவியைவழக் கில்லியைப் பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று பாடினுங்கொடுப் பாரிலை பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற் கியாதுமையுற வில்லையே.
நலமிலாதானை நல்லனேயென்று நரைத்தமாந்தரை இளையனே குலமிலாதானைக் குலவனேயென்று கூறினுங்கொடுப் பாரிலை புலமெலாம்வெறி கமழும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அலமராதமர் உலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
நோயனைத்தடந் தோளனேயென்று நொய்யமாந்தரை விழுமிய தாயன்றோபுல வோர்க்கெலாமென்று சாற்றினுங்கொடுப் பாரிலை போயுழன்றுகண் குழியாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
எள்விழுந்திடம் பார்க்குமாகிலும் ஈக்கும்ஈகிலன் ஆகிலும் வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அள்ளற்பட்டழுந் தாதுபோவதற் கியாதுமையுற வில்லையே.
கற்றிலாதானைக் கற்றுநல்லனே காமதேவனை யொக்குமே முற்றிலாதானை முற்றனேயென்று மொழியினுங்கொடுப் பாரிலை பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அத்தனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
தையலாருக்கோர் காமனேயென்றுஞ் சாலநல்வழக் குடையனே கையுலாவிய வேலனேயென்று கழறினுங்கொடுப் பாரிலை பொய்கையாவியின் மேதிபாய்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் ஐயனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
செறுவினிற்செழுங் கமலமோங்குதென் புகலூர்மேவிய செல்வனை நறவம்பூம்பொழில் நாவலூரன் வனப்பகையப்பன் சடையன்றன் சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய பாடல்பத்திவை வல்லவர் அறவனாரடி சென்றுசேர்வதற் கியாதுமையுற வில்லையே. இது பொன்வேண்டுங் குறிப்புடன் பதிகமோதித் துதி செய்யவுஞ் சுவாமி கிருபைசெய்யாமையால் மனவெறுப் புடன் திருமடத்துக்கெழுந்தருளாமல் ஆலயத்தில் திருப்பணிக்காக வந்திருந்த செங்கற்களைப் பரப்பி அதன்மேற் பள்ளிகொண்டு துயில்கூர்ந்து அது நீங்கி யெழுந்தபோது செங்கற்கள் பொன்னாயிருக்கக்கண்டு மகிழ்ந்து ஓதித் துதிசெய்தருளியது.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அக்கினியீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.