Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.44 முடிப்பதுகங்கை பண் - கொல்லிக்கௌவாணம்

சுந்தரமூர்த்தி நாயனார்

7.44

முடிப்பதுகங்கை பண் - கொல்லிக்கௌவாணம்

446

முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில் நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார் கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற் பிடிப்பது பாம்பன்றி இல்லை யோவெம் பிரானுக்கே.

447

தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள் கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள் ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே.

448

தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச் சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.

449

நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள் எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச் சிரிதலை மாலை சடைக்க ணிந்தவெஞ் செல்வனைப் பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.

450

வேயன தோளி மலைம களைவி ரும்பிய மாயமில் மாமலை நாட னாகிய மாண்பனை ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும் பேயனே பித்தனே என்ப ராலெம் பிரானையே.

451

இறைவனென் றெம்பெரு மானை வானவ ரேத்தப்போய்த் துறையொன்றித் தூமல ரிட்ட டியிணை போற்றுவார் மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம் பிறையன்றிச் சூடுவ தில்லை யோவெம் பிரானுக்கே.

452

தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும் ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும் ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப் பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே.

453

அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார் வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே.

454

கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால் எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள் பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக் கரியின் உரியல்ல தில்லை யோவெம் பிரானுக்கே.

455

காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத் தீசனை ஊரனெட் டோ டி ரண்டுவி ரும்பிய ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்னடித் தொண்டன்றான் ஏசின பேசுமின் தொண்டர் காளெம் பிரானையே.